சேரனின் ஆட்டோகிராப் ரீயூனியன்

 சேரனின் ஆட்டோகிராப் ரீயூனியன்


Some Memories never fade - they grow. Celebrating @CheranDirector's #Autograph timeless journey! ❤️✍️✨

ICYM #AutographTrailer
▶️ https://youtu.be/GUtPxxvs6eY?si=IK7YboFNMJhauS-z

#AutographFromNov14

@actress_Sneha #Gobika #Mallika #Kanika #Rajesh @dop_ravivarman @vijaymilton #DwaRaghanath #SangiMahendra #Bharatwaj @pandiraaj_dir @chimbu_deven @jagan_dir #Ramakrishnan #Sami #SabeshMurali @pavijaypoet @KavingarSnekan #Satishkumar @johnsoncinepro @onlynikil 





















இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய 'ஆட்டோகிராப்' திரைப்படம் வரும் 14ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2004ம் ஆண்டில் வெளியான இத்திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் புதுபிக்கப்பட்டு வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து ஊடகங்களிடமும், ரசிகர்களிடமும் பகிர்ந்து கொள்ளும் வகையில் படக்குழுவினர் 'ஆட்டோகிராப் ரீயூனியன்' எனும் பெயரில் பிரத்யேக நிகழ்வை ஒருங்கிணைத்தனர். சென்னையில் நடைபெற்ற இந்த ரீயூனியன் நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் அமீர், நடிகர் ஆரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் தொடக்கத்தில் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சேரன் நினைவு பரிசினை வழங்கி கௌரவித்தார். 'ஆட்டோகிராப்' படத்தில் சேரனுடன் பணியாற்றிய உதவியாளர்கள் தங்களின் அனுபவங்களை கலகலப்புடன் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சேரன், நடிகை சினேகா, சேரனின் உதவியாளர்கள் ராமகிருஷ்ணன், ஜெகதீசன்,  பாண்டிராஜ், உமாபதி, ஜெகன், பாடல் ஆசிரியர் சினேகன், இசையமைப்பாளர்கள் பரத்வாஜ், முரளி, கலை இயக்குநர்கள் வைரபாலன், ஜே.கே, மணி ராஜ், நடிகர் கணேஷ் பாபு, ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், இயக்குநர் அமீர், நடிகர் ஆரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இசையமைப்பாளர் பரத்வாஜ் பேசுகையில், ''நான் முப்பது வருடங்களாக இசைத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருந்தாலும், 'ஆட்டோகிராப்' படத்திற்கு இசை அமைத்த அனுபவம்  மறக்க முடியாதது. பாடல் வரிகளுக்கும், உணர்வுகளுக்கும் இசையில் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என நினைப்பேன். அந்த வகையில் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் அமைந்தன. இதற்கு முக்கிய காரணம் இயக்குநர் சேரன். என்னுடைய இசையில் வெளியான பாடல்களின் ஹிட் லிஸ்டில் 'ஆட்டோகிராப்' பட பாடல்கள் இடம் பிடித்திருக்கின்றன. இதற்காக இந்த தருணத்தில் சேரனுக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஆட்டோகிராப்' படம் ரீ ரிலீஸ் என்றவுடன், அதில் 'ஞாபகம் வருதே...' என்ற என்னுடைய குரலை கேட்டவுடன் எனக்கு பழைய நினைவுகள் பசுமையாய் நினைவுக்கு வருகின்றன. 'ஞாபகம் வருதே...' பாடலை சேரன் தான் எழுதினார். முதன்முதலாக நடைபெற்ற நிகழ்வுகளை பட்டியலிட்டு, அவற்றை அழகாக கோர்த்து, பாடலாக்கினார். படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில், ''நான் சேரன் அவர்களிடம் உதவியாளராக சேர்ந்த போது அவர் ஒரு முறை 'பாரஸ்ட் கம்ப்' என்ற படத்தை பார்த்தார். இதேபோல் ஒரு கதையை எழுத வேண்டும் என்று எங்களிடம் சொன்னார்.‌ அதன் பிறகு ஒரு வாரம் கழித்து எங்களிடத்தில் 'ஆட்டோகிராப்' படத்தின் கதையை சொன்னார். அவருடன் அலுவலகத்தில் ஒன்றாக தங்கி இருந்தேன். அது ஒரு அற்புதமான அனுபவம். அவருடைய கோபம், பாசம், வருத்தம், துக்கம் என எல்லாவற்றையும் ஜெகனுடனும், என்னுடனும் பகிர்ந்து கொள்வார்.

இந்தப் படத்தில் அனைவரும் புதிதாக இருக்கிறார்கள் . படத்திற்கு கமர்ஷியல் முகம் வேண்டும் என்பதற்காக நடிகை சினேகாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இந்தக் கதை ராமகிருஷ்ணன் குறிப்பிட்டது போல் நடிகர் விஜய்க்கு சென்றது. அதன் பிறகு நடிகர் பிரபு தேவாவிடம் சென்றது. அதன் பிறகு அரவிந்த்சாமியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நடிகர் ஸ்ரீகாந்திடமும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆட்டோகிராப் படத்தில் சேரன் நடிக்க வேண்டும் என ஒருபோதும் அவர் விருப்பப்படவில்லை. ஆட்டோகிராப் என்னும் கதை தான் அவரை நடிகராக உள்ளிழுத்துக் கொண்டது. அவர் நடிக்கப் போகிறேன் என்று சொன்னதும் நானும், சிம்பு தேவனும் தான் எதிர்ப்பு தெரிவித்தோம். படம் வெற்றி பெற்ற பிறகு சேரன் மற்றும் இதர உதவியாளர்கள் என்னை அர்த்தத்துடன் பார்த்தனர். எங்கள் இயக்குநர் எத்தனையோ அசிங்கங்கள், அவமானங்கள் பட்டாலும் அந்தப் படத்தை நேர்மையாக கடினமாக உழைத்து உருவாக்கினர். இயக்குநரான பிறகு தான் அதனுடைய கஷ்டம் என்ன என்பது எனக்குத் தெரிந்தது. அவரிடமிருந்து நிறைய  விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய அனைத்து படங்களிலும் அவருடைய பாதிப்பு இருக்கும். அவருடைய பாதிப்பில்லாமல் என்னால் படம் எடுக்க இயலாது.‌ இந்தப் படத்தை இந்தக்கால இளைய தலைமுறையினரும் கொண்டாடுவார்கள்,'' என்றார்.

நடிகர் ஆரி பேசுகையில், ''இங்கு பேசிய அனைவரும் சேரனுக்கும், அவர்களுக்குமான நட்பையும் , உறவையும், அன்பையும் பேசினார்கள். அவருடைய உறவினர் ஒருவர் கொடுத்த கடிதம் தான் எனக்கும், அவருக்குமான அறிமுகம். அவருடைய அலுவலகத்தில் சந்தித்தேன். படத்தின் பணிகள் தொடங்கும் போது அழைப்பு விடுக்கிறேன் என்றார். அவர் ஆட்டோகிராப் என்ற படத்தை இயக்குகிறார் என்று தெரிந்தவுடன் அவரை மீண்டும் தொடர்பு கொண்டேன்.

அப்போது நான் ஜிம் டிரைனர். அதனால் சிக்ஸ் பேக் உடல் தோற்றத்தையும் ட்ரெயினராக மாறிய போது உடல் எடை கூடிய தோற்றத்தையும் அவர் பார்த்தார். அப்போது அவர் நீங்கள் யார், என்ன செய்கிறீர்கள், என கேட்டார். நான் ஜிம் டிரைனர் என்று சொன்னேன். அதன் பிறகு நான் ஒரு படத்தில் நடிக்கிறேன். நீ புகைப்படத்தில் காட்டியது போல் என்னாலும் மாற முடியுமா, எனக் கேட்டார். மாற முடியும் என்று சொன்னேன்.

நான் கேள்விப்பட்டவரை அந்த காலகட்டத்தில் ஒரு கேரக்டருக்காக உடலை வருத்திக் கொள்வது கமல்ஹாசன் ஒருவர் மட்டும்தான்.‌ அதன் பிறகு நடிகர் விக்ரம் அந்த விஷயங்களில் ஆர்வம் காட்டினார். சேரன் அதே போல் விருப்பத்துடனும் ஈடுபாட்டுடனும் கேட்டபோது, இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அவருடன் பழகும் வாய்ப்பு கிடைக்குமே என்பதால் அவருடைய ஜிம் டிரெயினராக மாறினேன்.

அவருடைய ஈடுபாடு என்னை வியக்க வைத்தது. அவரிடம் என்னை கவர்ந்த மற்றொரு விஷயம் அவருடைய நினைவுத்திறன். படப்பிடிப்பு நடந்த தருணங்களில் என்னை கேரளாவிற்கு அழைத்துச் சென்று அங்கு எனக்கென்று தனியாக ஒரு அறையை ஒதுக்கி அவரும் நேரத்தை ஒதுக்கி உடற்பயிற்சி செய்வார். அந்த தருணத்தில் கிடைத்த ஓய்வில் தான் இப்படத்தின் கதையை என்னிடம் சொன்னார். கதையைக் கேட்டு முடித்ததும் இந்த படம் ஹிட் ஆகிவிடும், ஏனென்றால் நானும் ஒரு லவ் ஃபெயிலியர் கேஸ் தான் என்றேன்.

'ஆடும் கூத்து' என்ற படத்தில் எனக்கு நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. படப்பிடிப்பு தளத்தில் இரண்டு வரி டயலாக் தான். அதை என்னால் பொருத்தமாக பேச முடியவில்லை. அந்த சம்பவத்திற்கு பிறகு முதலில் நடிக்க பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து கூத்துப்பட்டறைக்கு சென்றேன். அதன் பிறகு நடிப்பை கற்றுக்கொண்டு இன்று இந்த மேடை வரை வந்ததற்கு காரணம் இயக்குநர் சேரன் தான்.

இன்று சாதிய ஒழிப்பு தொடர்பான படைப்புகளை வழங்குகிறார் என மாரி செல்வராஜ் கொண்டாடப்படுகிறார். ஆனால் 28 ஆண்டுகளுக்கு முன்பே 'பாரதி கண்ணம்மா' படத்தின் மூலம் சாதியம் சார்ந்து சாதிய ஒழிப்பு தொடர்பான படைப்பை கொடுத்தவர் சேரன்.

அதேபோல் ஆட்சியின் நிறை குறைகளை பற்றி 'தேசிய கீதம்' படத்தின் மூலம் துணிச்சலுடன் சொன்ன இயக்குநரும் சேரன் தான்.

இன்று காதலைப் பற்றி இளைய தலைமுறை ஜாலியாக குறிப்பிடுகிறார்கள். 'எனக்கு ரெண்டு பிரேக்கப் மச்சான்'. 'நாலு பிரேக்கப் மச்சான்' என்று சொல்கிறார்கள். ஒரு காதலுக்குப் பிறகு மீண்டும் ஒரு காதல் வரும் என்ற நம்பிக்கையை கொடுத்த படம் தான் ஆட்டோகிராப். ஒரு காதலுடன் வாழ்க்கை முடிந்து விட்டது என்று நினைத்த ஏராளமான இளைஞர்கள் மத்தியில் இப்படி ஒரு படம் வந்தவுடன் மற்றொரு காதல் வரும் என்ற எதிர்பார்ப்பையும், நம்பிக்கையும் ஏற்படுத்தியது. காதல் தொடர்கதை தான் என்ற விசயத்தை சொன்ன படம் ஆட்டோகிராப்.

இங்கு மேடையில் இயக்குநரை பற்றி அவருடைய உதவியாளர்கள் தங்களுடைய எண்ணங்களை சுதந்திரமாக பகிர்ந்து கொண்டார்கள் என்றால் அதற்கும் காரணம் இயக்குநர் சேரனின் ஜனநாயக தன்மை தான்.‌ இதை நான் மனதார பாராட்டுகிறேன்.‌

இந்தப் படத்தை பார்த்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை சமூக வலைதள பக்கத்தில் தவறாமல் பதிவிடுங்கள். ஏனெனில் இது போன்ற படங்கள் எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்,'' என்றார்.

இசையமைப்பாளர் முரளி பேசுகையில், ''சேரனுக்கு இசை மீது ஆர்வம் அதிகம். எல்லா விஷயங்களையும் நுட்பமாக பார்ப்பார். 'பொக்கிஷம்' படத்தில் 'நிலா அது வானம்...' எனும் ஒரு பாடல் இருக்கிறது. அந்தப் பாடலில் நாயகி ஓடி வந்து ஓரிடத்தில் நிற்கும் போது அவர் மூச்சிரைப்பு சப்தம் இருக்கும். இந்த பிரத்யேக சப்தத்தை பாடலில் இணைக்கும் போது நடைபெற்ற ஒரு சிறிய தவறை கூட நுட்பமாக கண்டுபிடித்து மாற்றி அமைத்தார்.

ஆட்டோகிராப் திரைப்படத்தை நாங்கள் நான்கு மாதங்களுக்கு முன்பாக பார்த்தோம். இசையில் எந்த மாற்றமும் தேவையில்லை என சொன்னேன் ஆனால் அவர் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களுக்காக சில மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதனால் சில மாற்றங்களை செய்து இருக்கிறோம். இது படம் வெளியான பிறகு அனைவருக்கும் தெரியும். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்,'' என்றார்.

இயக்குநர் அமீர் பேசுகையில், ''ஆட்டோகிராப் என்ற படமே ஒரு மனிதனின் பழைய நினைவுகளை பற்றிய கதை தான்.  அந்த படத்தைப் பற்றி 21 ஆண்டுகள் கழித்து பேசும்போது சேரனை பற்றி நிறைய பேசியிருக்கிறார்கள். சேரனுடைய உதவியாளர்கள் அனைவரையும் எனக்குத் தெரியும்.

அவர் ஆட்டோகிராப் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது நான் கொடைக்கானலில் ராம் படப்பிடிப்பில் இருந்தேன்.  அப்போது ஆட்டோகிராப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது மேடையில் அவர் கண் கலங்கி பேசினார். அந்த தருணத்தில் அவரைப் பற்றி தெரியுமே தவிர நெருங்கிய தொடர்பு இல்லை. அப்போது அவரிடம் நான் உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி செய்யலாமா எனக் கேட்டேன். அதை அவர் மறுத்துவிட்டார். அதன் பிறகு ஆட்டோகிராப் வெற்றி விழாவிற்கு பிறகு சேரனை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன்.

சேரன் பொதுவாக பெண்களை நன்றாக பார்த்துக் கொள்வார். ஏனெனில் சேரன் அக்கா, தங்கை, சித்தி, தோழி என ஏராளமான உறவுமுறை சார்ந்த பெண்களுடன் பேசி பழகியவர். அவருக்கு அண்ணன், தம்பி போன்ற உறவுகள் அதிகம் இல்லை. அதனால் சேரன் பெண்களிடம் அதிகமாக பழகியவர். அந்த உணர்வு சேரனிடம் எப்போதும் இருக்கும். இதனை நான் அவருடன் பழகிய பிறகு உணர்ந்து கொண்டேன்.

எங்கு தொடங்கி எங்கு நிறைவு செய்வதென்று தெரியவில்லை ஏனெனில் எனக்கும் சேரனுக்கும் அப்படிப்பட்ட உறவு நீடிக்கிறது.

சேரன் தமிழ் சினிமாவில் சாதித்த கலைஞர், தவிர்க்க முடியாத கலைஞர், மக்கள் கலைஞர். மகத்தான கலைஞன். சேரனின் அலுவலகத்திற்கு செல்லும் போது அவருக்கு பின்னால் இருக்கும் விருதுகளை பார்த்து எனக்கு பொறாமையாக இருக்கும். தேசிய விருது, மாநில விருது,  ஃபிலிம்ஃபேர் விருது.என அடுக்கி வைத்திருப்பார்.  பாலச்சந்தருக்கு பிறகு நான் நிறைய விருதுகளை பார்த்தது சேரனிடம் தான்.

சேரனிடம் பணியாற்றிய உதவியாளர்கள் இங்கு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் அவர்களுக்கான அடையாளத்தை வழங்கியது சேரன் தான்.

சேரனுடைய முதல் படத்தை எங்கள் ஊர் திரையரங்கத்தில் பார்த்தவன் நான். அதன் பிறகு அவருடைய வெற்றியை பார்த்தேன். நானும், இயக்குநர் பாலாவும் சாலிகிராமத்தில் ஒரு அறையில் தங்கி இருந்த போது அங்கு சேரன் வருவார். அவருடைய பார்வை தான் சண்டியர் போல் இருக்கும். ஆனால் அவர் மென்மையான மனதுடையவர்.

அவருக்கும், எனக்கும் நிறைய கருத்து முரண் இருந்தாலும் அவருடனான நட்பும் உறவும் தொடர்கிறது. அவரிடம் ஒரு அன்பு இருக்கிறது. அவர் எல்லாவற்றையும் எளிதாக மறந்து விடுவார்.

அவர் இன்றும் தன் மனதை இளமையாக வைத்துக் கொண்டிருக்கிறார். அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆட்டோகிராப் போன்றதொரு படத்தை வேறு யாராலும் உருவாக்க முடியாது. இந்தப் படத்தை பார்த்தால் ஒருவருக்கு எப்போதும் அவருடைய கடந்த காலத்தை நினைவுப்படுத்திக்கொண்டே இருக்கும். அப்படி ஒரு படைப்பு இது.  

இந்தப் படம் தான் வேறு வெர்ஷனில் 'பிரேமம்' ஆக வெளியானது. இப்போதும் இந்த ஜென் ஜி தலைமுறைக்கு ஏற்ற வகையில் உருவாக்கினால் இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். இந்தப் படம் சேரனுக்கு பொருளாதார ரீதியாக பெரிய வெற்றியை தர வேண்டும். இந்த தலைமுறைக்கு சேரன் என்றொரு மகத்தான கலைஞன் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது தெரிய வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்கிறேன்,'' என்றார்.

நடிகை சினேகா பேசுகையில், '' இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோகிராபில் பணியாற்றிய கலைஞர்களை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தப் படம் மீண்டும் வெளியாகிறது. இது நிச்சயம் வெற்றி பெறும். படத்தின் டிரைலரை பார்க்கும் போது புதிதாக இருந்தது.

சேரனிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இந்தக் கதை எழுதும்போது நீங்கள் எத்தனை காதல் தோல்விகளை சந்தித்தீர்கள்? என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அதற்கான பட்டியல் நிறைய இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்தப் படம் எனக்கு நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்தது. இந்த படத்தில் பணியாற்றும் போது எனக்கு மன அழுத்தம், மன உளைச்சல் இருந்தது. அதை கண்டுபிடித்த ஒரே மனிதர் சேரன் தான்.

ஆட்டோகிராப் படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தோம். அப்போது நான் டிப்ரஷனில் இருந்தேன். அது யாருக்கும் தெரியாது. நான் அதற்கேற்ற வகையில் சிரித்துக் கொண்டே இருப்பேன். அப்போது ஒரு ஓரத்தில் உட்கார்ந்து இருந்தேன். அப்போது என் அருகே அமர்ந்து, உனக்கு என்ன பிரச்சனை என கேட்டார். நான் ஒன்றும் இல்லை என்று சொன்னேன். அப்போது உனக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று மட்டும் எனக்கு தெரிகிறது. ஆனால் அது சீக்கிரம் சரியாகும் என்று சொல்லி நட்பு பாராட்டினார். அன்று தொடங்கி 21 வருடங்களாக என்னுடைய சிறந்த நண்பராக அவர் இருக்கிறார். என்னுடைய சிறந்த நண்பர், நலம் விரும்பி யார் என்று கேட்டால் நான் மார்தட்டி சொல்வேன் சேரன் என்று.

இந்தப் படம் பார்த்துவிட்டு என்னிடம் ஒரு ஆணும், பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியுமா என பலரும் கேட்டனர். அதை நாங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் படம் அவருக்காக வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன். அதற்காக அவர் கடுமையாக உழைத்தார். படத்தின் வெளியீட்டிற்காக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது எங்களுக்கு தெரியும்.

நான் நடித்ததில் எனக்கு பிடித்த படம் எது.என்று கேட்டால் நிச்சயமாக ஆட்டோகிராப் என்று தான் பதில் அளிப்பேன். 'ஒவ்வொரு பூக்களுமே..' பாடலை படமாக்கும் போது எவ்வளவு எக்ஸ்ப்ரஷன்களை வெளிப்படுத்த வேண்டும் என்பதை எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். அந்த அனுபவமே எனக்கு போதுமானது.

இந்த தலைமுறையினர் வித்தியாசமாக காதலை சொல்லி இருக்கிறார்கள். ஆனால் காதல் என்றால் இதுதான் என்று சொன்னவர், சொன்ன படம். ஆட்டோகிராப். இது வெற்றி பெறும்," என்றார்.

இயக்குநர் சேரன் பேசுகையில், ''இந்த மேடை சேரனை பற்றிய பாராட்டுரையாகவும், சேரனை பற்றிய விமர்சன மேடையாகவும் மாறிவிட்டது. இது இப்படித்தான் இருக்கும். இத்தனை ஆண்டு கால பயணத்தில் எல்லாவித மனிதர்களையும் சந்தித்து இருக்கிறேன். எல்லா நல்லவர்களையும் சந்தித்து இருக்கிறேன். பல தீய காரணங்களையும் எதிர்கொண்டு இருக்கிறேன். எல்லா பிரச்சனைகளையும் பார்த்திருக்கிறேன். எல்லாவற்றையும் கடந்து தான் வந்திருக்கிறோம். அதைத்தான் இந்த படம் சொல்கிறது. வாழ்க்கையில் நிறைய புதிய விஷயங்களை பார்ப்பீர்கள். அதனால் நீ எப்படி இருக்கிறாயோ  அதனை அப்படியே கடந்து செல். இதுதான் எனக்கு வாழ்க்கை கற்றுக் கொடுத்தது.

இந்த மேடையில் பேசிய எல்லோருடனும் எனக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. இருந்தாலும் அவர்கள் எனக்கான மேடையில் அமர்ந்திருக்கிறார்கள். அதனால் இதில் விளக்கம் சொல்வதற்கு எதுவும் இல்லை.  

என்னுடைய உதவியாளர்களுக்கு நான் சுதந்திரம் அளித்திருக்கிறேன். நீங்கள் நிறைய மேடைகளை விழாக்களை பார்த்திருப்பீர்கள். ஒரு இயக்குநரை அவருடைய உதவியாளர்கள் விமர்சித்த மேடை உண்டா? ஆனால் அதை நான் கொடுத்திருக்கிறேன். தொடர்ந்தும் கொடுப்பேன். அவர்களுடன் தொடர்ந்தும் பேசுவேன். ஏனெனில் ஒரு தகப்பனுக்கு தெரியும் தன்னுடைய பிள்ளைகளின் குணம் என்ன என்று. என் அப்பா என்னை எப்படி வளர்த்தாரோ.. அதே போல் என்னுடைய உதவியாளர்களையும் வளர்த்திருக்கிறேன்.


21 வருடங்களுக்குப் பிறகு ஆட்டோகிராப் படம் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களுக்கு சென்றடைவதற்காக நாங்கள் என்ன செய்திருக்கிறோம்? இந்த படம் அவர்களுக்கு என்ன சொல்லும்?  நான் இப்படித்தான் படம் எடுப்பேன். வணிக நோக்கத்திற்காக நான் படம் எடுத்திருந்தால் என்றைக்கோ காணாமல் போய் இருக்கலாம். பெரிய வெற்றியை கொடுத்து இருப்பேன். அஞ்சு படம் பெரிய ஹீரோக்களுடன் பணியாற்றி இருப்பேன். அதன் பிறகு காணாமல் போய் இருப்பேன். ஆனால் இன்றும் என்னுடைய படம் ஏதேனும் ஒரு இடத்தில் இந்த சமூகத்தில் யாரையோ ஒருவரை கையைப் பிடித்து அழைத்து கொண்டு கரை சேர்க்கிறது என்றால் அதைத்தான் என்னுடைய வெற்றியாக பார்க்கிறேன். அப்படித்தான் நான் என்னுடைய ஒவ்வொரு படத்தையும் உருவாக்கி இருக்கிறேன்.

இந்த ஆட்டோகிராப் படத்தைக் கூட அப்படித்தான் உருவாக்கினேன். எந்த தோல்வியாக இருந்தாலும் அதை கடந்து செல்லும் மனநிலை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது.  இதில் காதல் ஒரு கருவி மட்டும் தான். நீ எங்கேயும் சோர்ந்து போய் விடாதே.. அப்படி என்று சொல்வதுதான் இந்தத் திரைப்படம். 'ஒவ்வொரு பூக்களுமே..' என்ற பாடலை நானே பலமுறை உணர்ந்து பாடி இருக்கிறேன். சினேகனும் பலமுறை பாடியிருக்கிறார். அமீர் நிறைய முறை பாடியிருப்பார். சினேகாவும் இந்த பாடலை நிறைய முறை பாடியிருப்பார். ஏனெனில் தோல்வி அனைவருக்கும் வரும். அதை எதிர்கொண்டு கடந்து சென்று வெற்றி பெறும்போது மனதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். அதை இந்தப் படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும்.

இதைக் கடந்து இந்த படத்தை நான் தற்போது வெளியிடுவதால் எதையும் சாதித்து விடப் போவதில்லை. இன்றைய தலைமுறை எப்படி இருக்கிறது என்று எமக்குத் தெரியும். இந்தத் தலைமுறையினர் இந்தப் படத்தை பார்த்தால் அவர்களுக்கு வேறு ஒரு யோசனை தோன்றலாம். நாம் விதைக்கத்தான் முடியும். அதற்கு இந்த படம் தகுதியானது என்பதால் மீண்டும் வெளியிடுகிறோம்.

மனிதனை மனிதனாக பார். அவனை திருத்த வேண்டும் என்று நீ நினைக்காதே. அவனை அப்படியே ரசி. நீ அழகாய் இருப்பாய். அப்படித்தான் நான் இந்த உலகத்தை அழகானதாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அமீர் குறிப்பிட்ட ஒரு விஷயம் சரியானது.‌ நான் பெண்களுடனேயே பிறந்து வளர்ந்தவன். அவர்கள் என்னை பக்குவப்படுத்தி இருக்கிறார்கள் நான் பெண்களிடம் அன்பை மட்டும் தான் காட்ட முடியும். அது மற்றவர்களின் கண்களுக்கு அன்பாக தெரியவில்லை என்றால் அது என்னுடைய பிரச்சனை இல்லை. எனக்கும், சினேகாவுக்கும் இடையேயான நட்பு இன்றும் தொடர்கிறது என்றால் எங்கள் இடையே இருக்கும் கண்ணியம் தான் காரணம்.‌ சினேகாவிற்கும், பிரசன்னாவிற்கும் திருமணம் நிச்சயமானதற்கும் நான்தான் மிக முக்கியமான காரணம். பிரசன்னா எனக்கு முக்கியமான நண்பர். என்னை மதிக்கக் கூடியவர். பிரச்சனைகளை காரணம் காட்டி நீங்கள் உங்களது திருமணத்தை தள்ளிப் போடாதீர்கள். அதுவே பிரச்சனையாகிவிடும். முதலில் திருமணம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வருவதை எதிர்கொள்ளலாம் என்று சொன்னேன். நான் என்னை சுற்றி இருப்பவர்களுக்கு நல்லதை மட்டும் நினைக்கிறேன். அது நல்லதாக தெரியவில்லை என்றால் அது என்னுடைய பிரச்சனை இல்லை. அது அவர்களுடைய பிரச்சனை.

ஆட்டோகிராப் திரைப்படம் முதலில் வெளியான போது திரையரங்குகளில் மக்கள் கூட்டம் இல்லை. படத்தைப் பற்றிய விமர்சனங்கள் பத்திரிகைகளில் வெளியான பிறகு தான் கூட்டம் அதிகரித்தது. இந்த படத்தை கொண்டாடினார்கள். நல்ல படைப்புகளை உருவாக்க வேண்டும் என இயக்குநர்களுக்கு ஒரு உத்வேகத்தை அது அளித்தது.

விமர்சனங்கள் ஒரு காலத்தில் நேர்மையானதாகவும் விசாலமான பார்வையுடனும் இருந்தது. ஆனால் இன்று அதில் எங்கேயோ தவறு நிகழ்ந்திருக்கிறது. இன்று ஆன்லைனை எடுத்துக் கொண்டால் எல்லாம் மார்க்கெட்டிங்  என்றான பிறகு நாம் மனிதத்தை இழந்து விட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்தப் படத்தை நான் மீண்டும் எடிட் செய்து 15 நிமிடங்களை குறைத்து இருக்கிறேன். இந்தப் படத்தை இன்றைய சூழலுக்கு ஏற்ற வகையில் கலர் கரெக்ஷன் முழுவதுமாக செய்து இருக்கிறேன். இசை பழமை வாய்ந்ததாகவே இருக்குமே, அது கூட ரசிகர்களுக்கு சோர்வை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக டால்பி அட்மாஸ்  போன்ற புதிய இசை நுட்பங்களை இணைத்து இருக்கிறோம். பார்வையாளர்களை எங்கும் ஏமாற்றி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். 50 லட்சம் ரூபாயை செலவழித்து இந்த படம் புதிய அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக பணியாற்றி இருக்கிறேன்,'' என்றார்.



Comments

Popular posts from this blog

Max URB_N Shuffles It Up with Spotify: India’s First Multi-City Rap Concert Series Takes Over the South

மறைமுகம் இந்த படத்தில் டிட்டோ கதாநாயகனாகவும் நிஷித்தா தனுஜா இருவரும்

ஹிர்து ஹாரூன் நாயகனாக நடிக்கும் புதிய படம் “டெக்ஸாஸ் டைகர்”!!